கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-05 08:49 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ளது ராவுத்தர் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா.இந்த தற்காவிற்கு அருகே குளம் ஒன்று உள்ளது.கோடைகாலத்தின் பொழுது ஏற்பட்ட வறட்சியின் காரணமாக குளம் நீரின்றி வறண்டு இருந்த நிலையில் தர்காவிற்கு வேண்டிய நீரை எடுக்கும் விதமாக குளத்திற்கு நடுவே கிணறு ஒன்றை ஜமாத்தார்கள் வெட்டி அதில் உள்ள நீரை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் மூன்று மணி அளவில் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று தர்காவிற்கு சொந்தமான குளத்தின் நடுவே உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.கிணற்றில் விழுந்த பசுமாடு அலறல் சத்தமிடவே அதனை கண்ட முஸ்லிம் ஜமாத்தார்கள் கிணற்றிலிருந்து பசு மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஜெகதாபட்டினத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் கயிறு கட்டி பசு மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்பு பணிக்கு பின்னர் பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது. கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் மிகவும் குறுகிய நேரத்தில் மீட்க பாடுபட்ட ஜமாத்தார்களின் செயல் அப்பகுதியில் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News