பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் (15.08.2024) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் கிராம ஊராட்சியின் வரவு செலவு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சியில் நடைபெற்றுவரும் இதர வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.