சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் ரேணுகா. திருநங்கை. இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதி ஏரிக்கரையில் உள்ளது. இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவர் ஜே.சி.பி., மூலம் ஏரிக்கரையை நேற்று அகற்றியுள்ளார். இதற்கு ரேணுகா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ரேணுகாவை, பாலன் திட்டியுள்ளார். இதனை கண்டித்து நேற்று மாலை 5:00 மணியளவில் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் மற்றும் போலீசார் மறிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேணுகா திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயன்றார். போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில், 5:40 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர். இந்த மறியலால் சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.