நெல்லை மாவட்டம் முக்கூடல் இந்திராகாலனி பகுதியை சேர்ந்தவர் சிவன் பாண்டி (வயது 32). இவரும் வக்கீல்களான ஸ்ரீவைகுண்டம் புளியங்குளத்தை சேர்ந்த சரவணராஜ் (41), உக்கிரன் கோட்டையை சேர்ந்த சாம்லாவின் (28) ஆகியோர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அருகே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இடப்பிரச்சினையின் காரணமாக அங்கு வந்த ஜோசப், அந்தோணி ராஜ் உள்ளிட்டோருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சரவணராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றனர்.இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையில் தொடர்புடைய ஆரோக்கியநாதபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் (34), ஜோசப் (56), செல்வராஜ் (62), அகஸ்டின்(37), மார்க் (40), பிரான்சிஸ் (56), பொன்ராஜ் (38) மற்றும் ராஜேந்திரன் என்ற ஜப்பான் (39) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில் வக்கீல் சரவணராஜ் குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் நேற்று 2வது நாளாக கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.