குண்டடம் அருகே சரக்குவேன் மீது கார் மோதி டிரைவர் பலி

குண்டடம் அருகே சரக்குவேன் மீது கார் மோதி டிரைவர் பலி;

Update: 2024-08-23 08:23 GMT
குண்டடம் அருகே சரக்குவேன் மீது கார் மோதி டிரைவர் பலி திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் வேனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து குண்டடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக் இவரது மகன் முகமது தாவீக்(27). சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கோழி பாரம் ஏற்றி செல்வதற்காக சரக்கு வேனில் குண்டடம் அருகே உள்ள ருத்ராவதி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோலி நிறுவனத்திற்கு வந்தார். நிறுவனத்தின் வாசலில் கேட்டிற்கு முன்னால் வேனை நிறுத்திவிட்டு வேனுக்கு முன்பாக அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்றிருந்த சரக்கு வேன் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் வேன் முன்னால் திடீரென நகர்ந்தது. அப்போது வேனுக்கு முன்பாக நின்று இருந்த டிரைவர் முகமது தாவீக் மீது வேன் மோதிவிட்டு அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு வேன்மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆபத்தான நிலையில் இருந்த முகமது தாவீக்கை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே முகமது தாவீக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் குண்டடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News