திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வழுக்கு மரம் ஏறுதல்
மயிலாடுதுறை திருந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் உற்சவம் நடைபெற்றது
:- மயிலாடுதுறை திருஇந்தளூரில் பழமை வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. பஞ்ச அரங்க தலங்களில் ஐந்தாவது தலமும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமான சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகம விதிப்படி ஆவணி ரோகிணி நட்சத்திர தினமான நேற்று கொண்டாடப்பட்டது. மறுநாளான இன்று பரிமள ரெங்கநாதர் வீதி உலா உற்சவம் மற்றும் பக்தர் உரியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறும் உற்சவமும் நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்ட பின்னர் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக கோயிலின் முன்பு உரியடி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து, வழுக்கு மரத்தில் கோயிலால் நியமிக்கப்பட்ட பக்தர் ஒருவர் ஏறி வழுக்கு மரத்தின் மேலே தொங்க விடப்பட்டிருந்த சீடை முறுக்கு போன்ற கிருஷ்ணருக்கு பிடித்தமான பதார்த்தங்களை மேலிருந்து கீழே பக்தர்களுக்கு வீசி எறிந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.