கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் இயற்கை விவசாய சங்கத்தின் பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை விவசாய திருவிழா நடந்தது.சங்க கவுரவ தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். நுகர்வோர் சங்க செயலாளர்கள் அருண்கென்னடி, சுப்ரமணியன், அனைத்து வணிகள் சங்க தலைவர் செல்வகுமார், தொழிலதிபர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர். பரிமளா காந்தி வேலு வரவேற்றார்.நிகழ்ச்சியில் சென்னை, தலைமை செயலகம் நீர்மேலாண்மை துறை பிரிடோராஜ் லாபகர இயற்கை விவசாயம், நீர் மோலண்மை குறித்து பேசினார். திருத்துறைப்பூண்டி ஜெயராம் பாரம்பரிய நெல் ஆய்வு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், பாரம்பரிய விதை நெல்களின் அவசியம், செயற்குழு உறுப்பினர் நன்னிலம் உதயகுமார் இயற்கை விவசாயத்தின் தேவை, பரமத்தி வேலுார் சாணபாசி கரைசல் பயிற்சியாளர் லோகநாதன், சாணபாசி கரைசல், கல்லை தமிழ் சங்க செயலர் மதிவாணன் வள்ளுவர் கண்ட வேளாண்மை என்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கினர். திருவிழாவில் பாரம்பரிய நெல் வகைகள், இயற்கை இடுபொருள்கள், காய்கறி விதைகள் காட்சிப்படுத்தினர். தொடர்ந்து திருநெல்வேலி, வேலுார், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளுக்கு கருப்பு கவுனி நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பொருளாளர் இளங்கோ நன்றி கூறினார்.