ராமநாதபுரம் சமாதான கூட்டத்தின் போது தாசில்தார் சுவாமிநாதன் உறுதி

பனைக்குளம் அருகே நாடார்வலசை மதுபான கடை டிசம்பர் மாதத்திற்குள் அகற்றப்படும் நடவடிக்கை இல்லாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் பேட்டி

Update: 2024-08-31 11:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நாடார் வலசை மதுபானக் கடையை அகற்றுவதற்கான சமாதானக் கூட்டம் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.இதில் பங்கேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் 1 மாத காலத்திற்குள் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை நம்புவதாகவும்,நடவடிக்கை இல்லாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் அருகே நாடார்வலசை என்கிற கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த 24.8.2024 அன்று பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கலைந்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட நாடார்வலசை கிராமம் அருகில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.இந்த கடையை சுற்றிலும் கோவில்கள்,கல்விக்கூடங்கள் திருமண மஹால் உள்ளன.இந்த மதுபான கடையில் மதுஅருந்தி செல்லும் மது பிரியர்களால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் நாடார் வலசையில் உள்ள மதுக்கடையை அகற்ற கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றங்கரை,அழகன்குளம், நாடார்வலசை,பனைக்குளம், புதுவலசை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்,வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக விமன் இந்தியா மூவ்மெண்ட் மற்றும் மகளிர் குழுக்களின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நாடார்வலசையில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதுகுறித்த புகார் மனுக்கள் அளிக்கும் நடவடிக்கை இல்லை. இதை எடுத்து விமன் இந்தியா மூவ்மெண்ட் மற்றும் மகளிர் குழுக்கள் நாடார்வலசையில் அரசு மதுபான கடை இயங்கி வரும் சாலையில் கடந்த 24.8.2024 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.அதன்படி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெண்கள் திரண்டு வந்தனர்.அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை எனக் கூறி தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இருப்பினும் பெண்கள் திரண்டு நின்று டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோஷமிட்டனர்.பின்னர் தகவல் அறிந்து பகுதியைச் சேர்ந்த ஆண்களும் அங்கு வந்தனர்.போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக மகளிர் சுய உதவி குழு தலைவி பாலேஸ்வரி,பெருளாளர் பாத்திமா ரிபானா,விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் உம்முல் தௌலத்தியா,மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம்,மாவட்ட பொதுச்செயலாளர் சித்தி நிஷா,உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் அனுராதா,மண்டல துணை தாசில்தார் பாலகுமார்,வருவாய் ஆய்வாளர் சுதா,அழகன்குளம் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் படி நேற்று 29-ம் தேதி ராமநாதபுரம் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது.இதில் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த இரு சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டனர்.1 மாத காலத்திற்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவடைந்தது. விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் கூறுகையில்:- இன்று நடந்த பேச்சுவார்த்தையின் படி அதிகாரிகள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை அகற்றுவார்கள் என்று 99 சதவீதம் நம்புகிறோம்.நடவடிக்கை இல்லா விட்டால் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் மகளிர் அமைப்பினரை ஒன்று திரட்டி தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் மேற்கொள்வோம் என்றார்.

Similar News