தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை விடுதி முற்றுகை
தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு அரசு தங்கும் விடுதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விடுதி வாயில் கதவை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்.
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இங்கு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தரங்கம்பாடி சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த தங்கும் விடுதியில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாடு தங்கும் விடுதி வாயில் கதவை இழுத்து மூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய உறுப்பினர் பரமசிவம் தலைமை தாங்கினார், போராட்டத்தின் போது எந்தவித காரணமும் இன்றி பணியாளர்களை பணி நிறுத்தம் மற்றும் திடீர் திடீரென பணியிடை மாற்றம் செய்தது, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் குளறுபடி, பணி சுமையை ஏற்படுத்தி பணியாளர்களை மன அழுத்தத்திற்குட்படுத்தியது உள்ளிட்ட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறையாறு காவல் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கி இருந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரம் தவித்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.