இலவச இதய மருத்துவ ஆலோசனை முகாம்
சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட சீடர்கள் சார்பில் மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம்: ஏராளமான பொதுமக்கள் பரிசோதனை செய்து பலனடைந்தனர்
. மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட சீடர்கள் சார்பில் இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. ஆதிசங்கரரின் வழித்தோன்றிய பழமையான தர்மஸ்தாபனமான சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட மகாஸமஸ்தானத்தில், தற்போது பீடாதிபதியாகவுள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதிதீர்த்த மகாசன்னிதானத்தின் சன்னியாச ஆஸ்ரமமேற்று 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஸ்வர்ணபாரதீ மஹோற்சவம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சிருங்கேரி சாரதாபீடாதிபதி ஸ்ரீஸ்ரீ விதுசேகரபாரதி சன்னிதானத்தின் ஆணைப்படி சென்னை சாரதா செராமிக்ஸ் சத்தியவாகீஸ்வரன், சுவர்ணபாரதீ மகோற்சவ இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாமை மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் நடத்தினார்கள். மயிலாடுதுறை மூத்த மருத்துவர் செல்வம், டாக்டர் சிவகுமார், டாக்டர் பாரதிதாசன், டாக்டர் ரமணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பாடசாலை நிறுவனர் சுவாமிநாதசிவாசாரியார் துவக்கிவைத்து ஆசியுரை வழங்கினார். முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை பரிசோதனை இசிஜி சோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு பலனடைந்தனர்.