பாதுார் ஸ்ரீ பூரணி பொற்கலை ஐயனார் சுவாமி கோவிலில், பக்தர்கள் மத்தியில் வெள்ளை குதிரையில் பரியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இக்கோவிலில் ஊரணி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. 21ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினமும் சுவாமி சிறப்பு அலங்காரம் மற்றும் வீதியுலா நடந்தது. நேற்று ஊரணி விழா நடந்தது. அதனையொட்டி பிற்பகல் 2:00 மணியவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூரணி பொற்கலை ஐயனார் சுவாமி வெள்ளை குதிரையில் அமர்ந்து வீதியுலா வந்தார்.பின்னர் ஏரி பகுதிக்கு வந்த சுவாமி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் ஆரவாரத்துடன் மண்டப பகுதியை சுற்றி வலம் வந்து பரியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.அப்போது பக்தர்கள் காசு, வேர்க்கடலை, கம்பு, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை சுவாமி மீது வீசி வேண்டுதலை நிறைவேற்றினர். ஒரு மணி நேர பரியடிக்கும் நிகழ்ச்சிக்குப் பின், சுவாமி ஏரிப் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றடைந்தது. பக்தர்கள் பலர் வேண்டுதலுக்காக மண் குதிரைகளை சுமந்து வந்து வழிபட்டனர்.