ராசிபுரத்தில் சௌடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; கோலாகலமாக நடைபெற்றது..
ராசிபுரத்தில் சௌடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; கோலாகலமாக நடைபெற்றது..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடந்தது. ராசிபுரம் பகுதியில் தெலுங்கு தேவாங்கர் சமூக மக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மற்றும் திருவிழா ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவிற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் ,23-ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் ,28-ம் தேதி முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. தற்போது கும்பாபிஷேக விழாவுக்கான முக்கிய நிகழ்ச்சிகள் வரும் பிப்ரவரி மாதம் ,5-ம் தேதி வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், புண்யாகவாசனம் மற்றும் கலச ஆவாஹனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது . விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி ,6-ம் தேதி வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை, 5:30 மணி முதலே இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் பின்னர் மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை இதனைத் தொடர்ந்து காலை, 8:45 மணி அளவில் கடம் புறப்பாடும், கோபுர கலசங்களுக்கும், பின்னர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முடிந்த பின்னர் மகா தீபாராதனை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர்..