ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர், சாலை வசதி கேட்டு கொழிஞ்சிபட்டி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர், சாலை வசதி கேட்டு கொழிஞ்சிபட்டி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர், சாலை வசதி கேட்டு கொழிஞ்சிபட்டி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட கொழிஞ்சிபட்டி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய் பாதிக்கப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை மற்றும் மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.