கோழிப்பண்ணை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அமைச்சர் சிவ.வி.மெய்ய நாதன் கருத்து.

கோழிப்பண்ணை தொழில் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆலோசனை கூட்டத்தில் உறுதி.

Update: 2024-09-04 12:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் தலைமையில் இன்று மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் .ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நாமக்கல், ஈரோடு மற்றும் சேலம் கோழி பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பிரநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு சுமார் 60,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பின்பற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் சிவப்பு, ஆரஞ்சு. பச்சை ஆகிய பிரிவுகளாக 50,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சிவப்பு பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சாலைகள் ஆண்டு தோறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தங்களது உரிமத்தினை புதுப்பிக்க வேண்டும். உரிமங்களை புதுப்பிப்பதில் ஏற்படும் காலதாமங்களினால் தொழில்கள் பாதிக்கப்படுவதையும், தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படுவதை தவிர்த்திடும் வகையிலும் இந்தியாவிலேயே வேறு எந்த முதலமைச்சரும் செயல்படுத்திடாத நிலையிலும் சிவப்பு வகை தொழிற்சாலைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், ஆரஞ்சு தொழிற்சாலைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பச்சை தொழிற்சாலைகள் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்தால் போதும் என்று தொழிலாளர்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர்களும் மனநிறைவோடு தங்களது தொழில்களில் ஈடுபட சட்டம் இயற்றிய பெருமைக்குரியவர் ன தமிழ்நாடு முதலமைச்சர் . தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ளன. பொள்ளாச்சி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்னை நார் தொழிற்சாலைகளை ஆரஞ்சு வகைப்பாட்டிலிருந்து வெள்ளை வகைப்பாட்டிற்கு மாற்றி சட்டம் இயற்றி தென்னை நார் தொழில் மேற்கொண்டு வருபவர்களுக்கு பாதுப்பாக அரணாக விளங்குபவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் . சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்திட நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேடுப்புகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 17 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு 9 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 முக்கிய இடங்களில் மீண்டும் மஞ்சபை விழிப்புணர்வு இயக்கத்தினை செயல்படுத்தும் விதமாக தானியங்கி மஞ்சபை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகின்றது. வருகின்ற 8.9.2024 அன்று தர்மபுரி ஒக்கேனக்கல் முதல் பூம்புகாம் வரை காவிரி கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 2 இலட்சம் பனை விதைகள் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்டுள்ளன. கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கு ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் – 2022ன் படி பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அவற்றில் கோழி கழிவு/ எச்சங்களை 2 நாட்களுக்கு ஒரு முறை அப்புறப்படுத்த வேண்டும். கோழி கழிவு / எச்சங்களை சேகரிக்க நீர் புகாத வகையில் கல், கான்கிரீட், களிமண்ணால் ஆன தரை அமைக்க வேண்டும். மத்திய / பெரிய தர கோழிப்பண்ணைகள் கோழி எச்சங்களிலிருந்து உயிரி உரம், பையோ கேஸ் எனப்படும் எரிவாயு உற்பத்தி செய்ய வேண்டும். கூட்டாக இயங்கும் கோழி பண்ணைகள் கண்டிப்பாக பொது எரிவாயு உற்பத்தி செய்திடல் வேண்டும். இறந்த கோழிகளை அப்புறப்படுத்த 3 மீட்டர் ஆழம், 0.8 – 1.2 மீட்டர் விட்டம் அளவு உள்ள தொட்டி அமைத்து அப்பறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து நாமக்கல், ஈரோடு மற்றும் சேலம் கோழி பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பிரநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களையும், முட்டை ஏற்றுமதியில் உள்ள சிரமங்கள், கோழிகளை தாக்கும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து கோழி பண்ணை உரிமையாளர்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். அவற்றில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளான கோழி பண்ணை அமைக்க தரைத்தளம் அமைப்பது, 500 மீட்டர் தொலைவிற்குள் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் கோழி பண்ணை அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று கோழி பண்ணை அமைப்பது போன்ற சட்டங்களினால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இறந்த கோழிகளை பராமரிக்க குளிர்சாதன பெட்டிகள் வாங்க மானியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளார்கள். கோழிப்பண்ணையாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கோழிப்பண்ணை தொழில் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். நாமக்கல் மாநகராட்சியின் கழிவுநீர்கள் சேந்தமங்கலம் பகுதியில் சென்றடைவதை தடுக்கும் வகையில், கோரிக்கையின் அடிப்படையில் நாமக்கல் மாநகராட்சியில் ரூ.211.00 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைகள் அமைக்க திட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது இந்த பணிகள் முடிய ஓராண்டு காலமாகும் என்பதால் அதுவரை சேந்தமங்கலம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.

Similar News