ஆண்டிபட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்பு
மணியாரம்பட்டி - கன்னியப்பப்பிள்ளைபட்டி செல்லும் ரோடு அருகே புறம்போக்கு இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பபட்டி அருகே 'பார்' வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.மணியாரம்பட்டி - கன்னியப்பப்பிள்ளைபட்டி செல்லும் ரோடு அருகே புறம்போக்கு இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.இக்கடையில் 'பார்' வசதி இல்லை. இதே கடையை அனுப்பப்பட்டி அருகே விவசாய நிலத்திற்கு மத்தியில் அமைக்க அங்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை இடம் மாற்றி புதிய இடத்தில் நேற்று திறக்க நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டது. டாஸ்மாக் சரக்குகளை மினி வேனில் கொண்டு சென்று அந்த கட்டடத்தில் இறக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த மக்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தும் திரும்பிச் செல்லவில்லை. பாதுகாப்பு கருதி மினி வேனில் கொண்டு சென்ற டாஸ்மாக் சரக்குகளை புதிய இடத்தில் இறக்கி வைக்காமல் திரும்ப எடுத்துச் சென்று விட்டனர்.கிராம மக்கள் கூறியதாவது: தற்போது டாஸ்மாக் கடைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் விவசாய நிலங்களுக்கு மத்தியில்உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் விவசாயம் கால்நடை வளர்ப்பை தொழிலாக கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் விளைநிலங்கள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் தங்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தனர்.