முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹேன்ட்பால் போட்டி

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹேன்ட்பால் போட்டிகள் மாநில செயலாளர் சின்னாளபட்டி சேரன்வித்யாலயா பள்ளியில் துவக்கி வைத்தார்

Update: 2024-09-12 04:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹேன்ட்பால் போட்டிகள் தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சிவக்குமார் அவர்களின் உத்தரவின்படி சின்னாளபட்டி சேரன்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11.09.24 முதல் 14.09.24 வரை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் ஆண் பெண் இருவர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆண் பெண் இருவர் என நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. விளையாட்டு போட்டிகளுக்கான துவக்கவிழா சேரன்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஹேன்ட்பால் கழகத்தின் மாநில செயலாளரும், சேரன் பள்ளி நிர்வாக அறங்காவலருமான சிவகுமார் தலைமை தாங்கினார். சேரன் கல்வி அறக்கட்டளை, அறங்காவலர் பள்ளி முதல்வர் திலகம், ஹேன்ட்பால் கழகத்தின் மாவட்ட தலைவர் திரைப்பட நடிகர் சமயநாதன், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் வரவேற்று பேசினார். போட்டியில் 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஹேன்ட்பால் அணிகள் கலந்துகொண்டன. விளையாட்டு வீரர்களை வாழ்த்தி ஹேன்ட்பால் கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமார் பேசும் போது தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு தமிழக விளையாட்டுதுறை உலக அளவில் பேசப்படுகிறது. கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் விளையாட்டுதுறையை மேம்படுத்தி வருகிறார். அவருக்கு நமது விளையாட்டு வீரர்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த வருடம் முதல் பள்ளி மாணவர்களுக்கான முதல்வர்கோப்பை போட்டிகள் நடத்தப்படுவது இளம் விளையாட்டு வீரர்களை பள்ளியிலிருந்தே ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது. இப்போது மாவட்ட அளவில் விளையாடும் நீங்கள் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு பெற்று சாதனை படைக்க உள்ளீர்கள் சிறந்த முறையில் மற்ற விளையாட்டு வீரர்கள் விளையாடுவதை பார்வையிட்டு சிறந்த விளையாட்டு வீரர்களாக நீங்கள் உருவாக எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். முதல் போட்டி பழனி பி.ஆர்.ஜி. மெட்ரிக் பள்ளி அணிக்கும், பழனி கார்த்திக் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி அணிக்கும் பழனி ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி அணிக்கும், ஒட்டன்சத்திரம் கல்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் நடைபெற்றது. ஹேன்ட்பால் விளையாட்டு போட்டிகளின் நடுவர்களாக உடற்கல்வி இயக்குநர்கள் மகாதேவன், நெப்போலியன், ஹேன்ட்பால் அணியின் பயிற்சியாளரும், சேரன்பள்ளி உடற்கல்வி இயக்குநருமான அசோக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், செந்தில்குமார், கிறிஸ்டோபர், கிறிஸ்துராஜா, சுரேந்திரன், பிரவீன்குமார், நாகராஜ், பாண்டியராஜன் ஆகியோர் செயல்பட்டனர். முன்னதாக காலை 8மணியளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வந்த மாணவர்களின் வயது மற்றும் கல்வி சான்றிதழ்களை ஆசிரிய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு போட்டிகளில் பங்கேற்க செய்தனர். தமிழக முதல்வர் கோப்பைக்கான ஹேன்ட்பால் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சேரன் பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

Similar News