முதல்நிலை எழுத்துத் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 14.09.2024 அன்று நடைபெறவுள்ளது. தேர்வானது காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு காலை 08.30 மணிக்குள் வந்து தங்களது வருகை பதிவினை உறுதி செய்திட வேண்டும். தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் 09.00 மணி வரை அனுமதிக்கப்படும். திண்டுக்கல் வட்டத்தில் 60 தேர்வு கூடங்களில் 16,950 தேர்வர்களும், கொடைக்கானல் வட்டத்தில் 2 தேர்வு கூடங்களில் 369 தேர்வர்களும், பழனி வட்டத்தில் 21 தேர்வு கூடங்களில் 5,374 தேர்வர்கள் என மொத்தம் 83 தேர்வு கூடங்களில் மொத்தம் 22,693 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதன்படி, திண்டுக்கல் வட்டத்தில் 19 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படையும், கொடைக்கானல் வட்டத்தில் 1 நடமாடும் குழுக்கள், 1 பறக்கும் படையும், பழனி வட்டத்தில் 7 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளன அலுவலர்கள் தேர்வு நாளுக்கு முன்னர் அனைத்து தேர்வுக் கூடங்களையும் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தேர்வு நாளன்று தேர்வுக்கூடங்களை தணிக்கை செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், பழனி சார் ஆட்சியர் கிசான் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பிரிவு அலுவலர்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன், தமிழரசன் உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.