கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கு : ஜாமீன் மனு தள்ளுபடி!
முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு புகுந்த சிலர், அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த படுகொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக, முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் லூர்து பிரான்சிஸ் புகார் அளித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில்தான் அவர் கொல்லப்பட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு, மேற்கண்ட 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும், முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து, அங்கிருந்த லூர்து பிரான்சிசை மனுதாரர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்ததை நேரில் பார்த்ததற்கான சாட்சியங்கள் உள்ளன. மேலும் மனுதாரர்களின் சட்டையில் இருந்த ரத்தக்கறை மாதிரியும், இறந்த லூர்து பிரான்சிஸ் ரத்த மாதிரியும் ஒரே நபருடையது என்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்தான் மனுதாரர்களுக்கு கீழ்கோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்தது. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.