முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்!! இரண்டாவது நாளாக ஆட்சியர் ஆய்வு.

தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 6-வது முகாமாக குமாரபாளையம் வட்டத்தில் 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சா. உமா ஆய்வு.

Update: 2024-09-19 16:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமாரபாளையம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 18.09.2024 அன்று காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று குமாரபாளையம் வட்டத்தில் 2-வது நாளாக அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 18.09.2024 அன்று இரவு உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் வெளிபுற நோயாளிகள் பகுதி, மகப்பேறு பிரிவு, மகளிர் அறை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு அறையில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பள்ளிபாளையம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, விடுதியில் மாணவர்களுக்கான குடிநீர் வசதி, சமையல் அறை, உணவு பொருட்களின் தரம், மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம், கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து இன்று பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் கூடத்தில் உணவு சமைக்கப்பட்டு பல்வேறு பள்ளிகளுக்கு விநியோகம் செய்திட வாகனம் மூலம் எடுத்துச்செல்லப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சமையல் பணியாளர்களுக்கு உணவை தரமாகவும், சுவையாகவும் சமைத்திடுமாறு உத்தரவிட்டார். பள்ளிபாளையம் நகராட்சி, சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு பெண்கள் கழிப்பறையை பார்வையிட்டு, கழிப்பறையை சுத்தமாகவும், தூய்மையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சமய சங்கிலி அக்ரஹாரம் ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில் தூய்மைப் பணிகள், குடிநீர் குழாய்கள் உட்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக ஆலாம்பாளையம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை காவலர்களின் வருகை பதிவேடு, அவர்கள் தூய்மை பணி மேற்கொள்ளும் பகுதிகள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணியில் ஈடுபட உள்ள தூய்மை காவலர்கள் அனைவரும் தவறாமல் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் எனவும், கட்டாயம் அவர்களது அடையாள அட்டையையும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, பள்ளிபாளையம் நகராட்சி, வார்டு எண்:11, மாதாபுரத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குமாரபாளையம் வட்டம், காடச்சநல்லூர், கா.சத்யா நகர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளிபாளையம் நகராட்சியில் மளிகை கடைகளில் உணவு பொருட்களின் தரம், விலை விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் மஞ்ச பை மற்றும் துணிப்பைகளில் பொருட்களை பெற்று செல்லுமாறு பொதுமக்களை அறிவுத்தினார். பேருந்துகளில் மகளிருக்கான இலவச விடியல் பயணம் சேவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, காடச்சநல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, பால் பரிசோதிக்கப்படும் முறை, பால் கொள்முதல் விலை, சங்கத்தில் உள்ள மொத்த பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட விவரங்களையும், உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் விரிவாக கேட்டறிந்தார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், குமாரபாளையம் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

Similar News