கோ.பொன்னேரியில் கிணற்றில் விழுந்த இருவர் உயிருடன் மீட்பு

கயிறு கட்டி காப்பாற்ற சென்றவரும் விழுந்ததால் பரபரப்பு

Update: 2024-09-20 17:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அய்யப்பன்நாயக்கன்பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). விவசாயியான இவர் கடந்த வாரம் தனது மகனுக்கு திருமணம் வைத்துள்ளார். இந்த திருமணத்திற்கு பொன்னேரியை சேர்ந்த அவரது மைத்துனர் வடிவேல் என்பவர் போகவில்லை. இதனால் ரவிச்சந்திரன் பொன்னேரிக்கு வந்து தனது மைத்துனரான வடிவேலுவை சந்தித்து ஏன் திருமணத்திற்கு வரவில்லை என கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ரவிச்சந்திரன் அப்பகுதியில் இருந்த 50 அடி தரை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது உறவினரான சுப்ரமணியன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 20) என்பவர் கயிறை கட்டிக்கொண்டு ரவிச்சந்திரனை மீட்பதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது பாதி தூரம் இறங்கிய போது திடீரென கயிறு அருந்து தமிழ்செல்வனும் கிணற்றில் விழுந்தார். கிணற்றில் தண்ணீர் அதிகம் இல்லாததால் இருவரும் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்புத் துறையினர் மற்றும் விருத்தாசலம் போலீசார் இருவரையும் லாவகமாக வீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு வந்தவர் கிணற்றில் விழுந்ததால் அவரை காப்பாற்ற முயன்றவரும் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News