விருத்தகிரீஸ்வரர் கோவில் அர்ச்சகரை கண்டித்து கோவில் முன்பு முன்னாள் அறங்காவலர் தர்ணாவில் ஈடுபட முயற்சி

தமிழில் அர்ச்சனை செய்யக்கோரி ஆதரவாளர்களுடன் போராட்டம்

Update: 2024-09-21 16:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோவில் காசியை விட வீசும் பெரிது என்ற புகழ் பெற்ற கோவிலாகும். இந்நிலையில் இக்கோவிலில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முன்னாள் அறங்காவலர் குழு ராமையா என்பவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அங்குள்ள அர்ச்சகர் தினேஷ் என்பவரிடம் தமிழில் அர்ச்சனை செய்ய கூறியுள்ளார். அதற்கு அவர் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்வேன். தமிழில் அர்ச்சனை செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமையா அவரிடம் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என தகவல் பலகை உள்ளது அதன் அடிப்படையில்தான் நான் கேட்டேன் என கூறியுள்ளார். அதற்கு அவர் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து கொடுங்கள் பிறகு தமிழில் அர்ச்சனை செய்கிறேன் என கிண்டலாக கூறியதாகவும் தெரிகிறது. இது குறித்து ராமையா கோயில் நிர்வாக அலுவலகத்தில் புகார் தெரிவித்து விட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து ராமையா சொந்த வேலை காரணமாக வெளிநாடு சென்று விட்டு தற்போது வந்துள்ளார். இந்நிலையில் நேற்று உலக சிவனடியார்கள் திருக்கூட்டம், கிரிவல வழிபாடு அமைப்பு, நம்பி ஆரூரான் திருமறை ஆசிரியர் அறக்கட்டளை ஆகியோருடன் ராமையா விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட தயாரானார். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். தன்னை இழிவாகவும் கேவலமாகவும் பேசிய அர்ச்சகர் தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார். தொடர்ந்து கோரிக்கைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதன் அடிப்படையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றார். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News