காவிரி உபரி நீரை கொண்டு இணைக்கும் பொன்னி–திருமணிமுத்தாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.- தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தல்

சிப்காட் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் கிராமந்தோறும் சென்று பிரசார இயக்கம், கோரிக்கை மாநாடு மற்றும் தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளோம்.

Update: 2024-09-23 13:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது.. நாமக்கல் மாவட்டத்தில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்னையாக சிப்காட் உள்ளது. விவசாய நிலங்களை அழித்து அங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசும், அதிகாரிகளும் நிலத்தை எடுப்பதில் உறுதியாக உள்ளனர்.சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளனர். நீர்நிலைகளையும், விவசாய நிலங்களையும், வீட்டு மனைகளையும் அகற்றும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஏற்கெனவே, இந்த மாவட்டத்தில் சிட்கோவுக்கு நிலம் எடுக்கப்பட்டு, 12 ஆண்டுகளாக எந்தவித பயன்பாடுமின்றி அவை தரிசு நிலங்களாக கிடக்கின்றன. அந்த நிலத்தை சிப்காட்டுக்கு எடுக்காமல் விளைநிலங்களை எடுக்க முயற்சிக்கின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து சிப்காட் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் கிராமந்தோறும் சென்று பிரசார இயக்கம், கோரிக்கை மாநாடு, தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளோம். கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காயில் தொடங்கி கடுகு வரையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. ஆனால், மத்திய அரசு மறைமுகமாக மரபணு மாற்றப்பயிர்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அடுத்த மாதம் திருச்சியில் மாநில அளவிலான கருத்தரங்கை நடத்த உள்ளோம். காவிரி உபரி நீரை கொண்டு இணைக்கும் பொன்னி–திருமணிமுத்தாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முல்லை பெரியாறு பிரச்னை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அணை பாதுகாப்பாக உள்ள நிலையில், சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். தமிழக அரசுக்கு எதிராக கேரள அரசை தூண்டிவிடும்போக்கை மேற்கொள்ளும் முயற்சி நடக்கிறது. மேகதாது பகுதியில் அணைக்கு எவ்வாறு அனுமதியில்லையோ, அதேபோல ராசிமணல் பகுதியிலும் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்றார்.பேட்டியின் போது மாநில தலைவர் குணசேகரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News