பேரூராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம்.
பரமத்தி வேலுரில் பேரூராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,செப்.23- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் நாமக்கல் மாவட்ட பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் காலசாமி தலைமை வகித்தார் . தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை வரவேற்றார்.கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இறந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் கூட்டத்தை மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை நடத்த வேண்டும். தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களை அடுத்த கூட்டத்தில் தேர்வு செய்ய வேண்டும். அரசாணை எண்.23, நாள்.21.02.2024ன்படி நீக்கம் செய்யப்பட்ட பொது சுகாதாரம், குடிநீர் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு பணியிடங்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும். 2020-21 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள 20 சதவீதம் இளநிலை உதவியாளர்கள்,வரித்தண்டலர் காலிப் பணியிடங்கள் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். விடுபட்டு இருக்கும் சிபிஎஸ் தொகையினை உரிய தலைப்பில் செலுத்தி உடன் 2023-24 வரை சிபிஎஸ் ஸ்டேட்மெண்ட்ஐ ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தட்டச்சர் மற்றும் புள்ளியியல் தொகுப்பாளர்கள் பணியிடங்களில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். காலியாக உள்ள மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தலைமை எழுத்தர் பணியிடங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஓட்டுநர் பணியிடம் தோற்றுவித்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். இளநிலை உதவியாளர்கள்,வரித்தண்டலர் பணியாளர்களின் பணிவரன்முறை செய்து ஆணையிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.