தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன்.

நாம் இயற்கையோடு சேர்ந்து ஆரோக்கியமாக வாழக்கூடிய சரிவிகித உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அறிவுரை.

Update: 2024-09-24 13:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் போஷன் அபியான் - தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2024 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து வட்டாரங்களிலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு கிராமத்தின் ஆரோக்கியத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். இவர்களால் அக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்சேய் நலன் பாதுகாக்கப்படுகிறது. நம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் என்ற நிலையை நாம் உருவாக்கிட வேண்டும். மேலும், சுகாதார துறையும், அங்கன்வாடி பணியாளர்களும் இணைந்து கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவசர காலங்களில் தேவையான சிகிச்சைகள், மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கு தேவையான வழிகாட்டுதல்களை தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தற்போது உள்ள அவசர உலகில் துரித உணவுகளை அதிகளவில் எடுத்து கொள்கின்றனர். அவற்றில் உள்ள செயற்கை உணவு பொருட்களின் கலப்பு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நாம் இயற்கையோடு சேர்ந்து ஆரோக்கியமாக வாழக்கூடிய சரிவிகித உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும். ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை வளமான, ஆரோக்கியமான மாவட்டமாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் போஷன் அபியான் - தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2024 உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, தேசிய ஊட்டச்சத்து மாதம் – 2024 முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி. விவாதப்போட்டி, ஒவியப்போட்டி, ரங்கோலி கோலப்போட்டி. அடுப்பில்லா சமையல் போட்டி, காய்கறி பழங்கள் செதுக்குதல் போட்டி, வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ்களையும், அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கான நடத்தப்பட்ட அடுப்பில்லா சமையல் போட்டி மற்றும் மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் வழங்கினார். தொடர்ந்து, தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2024 திட்ட விளக்க கண்காட்சி, அடுப்பில்லா சமையல் கண்காட்சி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார பணியாளர்கள், கல்லூரி மாணவியர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News