தகாத உறவிற்கு தடையாக இருந்த ஐந்து வயது சிறுவனை கல்லால் அடித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.
ஆயுள் தண்டனை
கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் கோம்பை காவல் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஐந்து வயது சிறுவன் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கோம்பை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல்துறை விசாரணையில் இறந்த சிறுவன் ஹரிஷ் கீதா மற்றும் முருகன் தம்பதியினருக்கு பிறந்த சிறுவன் என தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் தாய் கீதாவிடம் விசாரணை மேற்கொண்டதில் கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகன் ஹரிஸ் (வயது 5) தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கீதாவிற்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில் கீதாவின் வீட்டிற்கு கார்த்திக் செல்லும்போதெல்லாம் சிறுவன் ஹரிஷ் இருவரின் தகாத உறவிற்கு இடையூறாக இருந்ததால் கார்த்திக் சிறுவனை ரங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று செங்கல்லை கொண்டு சிறுவனின் தலையில் கொடூரமாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்த கோம்பை காவல் நிலைய காவல்துறையினர் 5 வயது சிறுவனை கொலை செய்த கார்த்திக் என்ற இளைஞர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை அறிக்கை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், சாட்சியங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் கார்த்திக் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதம் விதித்து கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளியை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.