கல்குவாரிக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் திடீர் போராட்டம்!

சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சுமார் 6மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-09-26 04:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கலுங்கு விளை சாலையில் தனியார் கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் நெடுங்குளத்தில் செயல்படும் கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 200க்கு மேற்பட்டோர் இன்று புதன்கிழமை காலை அங்குள்ள பால்பண்ணை முன்பு திரண்டு வந்து திடீரென அமர்ந்து கண்ணீல் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, டிஎஸ்பி சுபகுமார், காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸார், வருவாய்த்துறையினர் சம்பவ இடம் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கல்குவாரி அகற்றப்படும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் மாவட்ட கனிவள இயக்குநர் நாளை (வியாழக்கிழமை) நெடுங்குளம் கிராமத்திற்கு வந்து புகார் கூறப்பட்ட கல்குமாரியை ஆய்வு நடத்தி அதனை மூடுவதற்கான உத்தரவாதம் அளிப்பார் என உறுதி அளிக்கப்பட்டதும் அதன்பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கிராம மக்கள் அறிவித்தனர். அவ்வாறு கல்குவாரி மூடப்படாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை ரேசன், ஆதார் கார்டுகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஓப்படைத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Similar News