திருப்பூரில் ரோட்டின் குறுக்கே பாய்ந்த தெருநாயால் டூ வீலரில் சென்ற தம்பதி தடுமாறி லாரிக்குள் சிக்கி உயிரிழப்பு!
திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அருகே சாலையின் குறுக்கே பாய்ந்த தெருநாயால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி தடுமாறி லாரிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூரில், ரோட்டின் குறுக்கே பாய்ந்த தெருநாயால் டூவீலரில் சென்ற தம்பதி தடுமாறி லாரிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் அருகே தாராபுரம் ரோடு, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மணி, 48. மனைவி கவிதா, 43. தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் பனியன் நிறுவனத்திலும், மனைவி மரக்கடையிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு டூவீலரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பொல்லிகாளிபாளையம் அருகே, திடீரென குறுக்கே தெருநாய் ஒன்று பாய்ந்தது. உடனே, டூவீலரை கட்டுப்படுத்த முயன்ற போது, ரோட்டில் விழுந்தனர். அதேநேரம், அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, தம்பதி மீது ஏறியது. இருவருக்கும் இடுப்புக்கு கீழ் பகுதிகள் நசுங்கின. படுகாயமடைந்த தம்பதியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இறந்தனர். சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.