வடமாநில கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட போது காவல் துறையினர் மீது தாக்குதல்- தற்காப்பிற்காக போலீஸ் துப்பாக்கி சூடு - ஒருவர் மரணம்- ஒருவர் காயம்

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் ATM கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட போது காவல் துறையினர் மீது தாக்குதல்- தற்காப்பிற்காக போலீஸ் துப்பாக்கி சூடு - ஒருவர் மரணம்- ஒருவர் காயம்

Update: 2024-09-28 11:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு 27.09.2024-ம் தேதி திருச்சூர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து, ATM கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள் வெள்ளை நிற கிரிட்டா கார் மற்றும் ராஜஸ்தான் அல்லது ஹரியானா மாநில பதிவு கொண்ட கண்டெய்னர் லாரியில் வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாராபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி ஆற்று பாலம் அருகே திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் குமாரபாளையம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் குழுவினருடன் சுமார் 08.50 மணியளவில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த இராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியை தடுத்த நிறுத்திய போது வாகன ஒட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக சங்ககிரி நோக்கி ஓட்டினார். இதனால் அந்த வாகனத்தை காவல்துறையினர் பின்தொடர்ந்து விரட்டி சென்றபோது, மேற்கூறிய வாகனமானது சங்ககிரி, சங்ககிரி ரவுண்டானா, வெப்படை 4 ரோடு வழியாக அதிவேகமாக சென்று சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதியது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்ற அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற ஆய்வாளர் சன்னியாசிபட்டி அருகே தடுத்து நிறுத்தினார். அதில் இருந்த ஓட்டுநர் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருச்சூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் இருந்த நான்கு பேரை ஆய்வாளரின் வண்டியில் ஏற்றியும், லாரியின் ஒட்டுநர் மற்றும் ஒரு காவலரை கண்டெய்னர் வண்டியிலேயே ஏற்றி அந்த வாகனத்தை வெப்படை காவல் நிலையம் நோக்கி கொண்டுவரும்போது கண்டெய்னருக்குள் இருந்து சத்தம் கேட்டதை தொடர்ந்து பின்னால் வந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தோப்பு காடு அருகில் வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரை கண்டெய்னரின் கதவை திறக்க சொல்லியுள்ளார். அந்த கண்டெய்னருக்குள் இரண்டு நபர்கள் இருந்தனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் பெரிய பையுடன் (bag) கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார். அதே சமயத்தில் கண்டெய்னர் வாகன ஓட்டுநர் ஆய்வாளரை தாக்கிவிட்டு பையுடன் ஓடியவரை பின் தொடர்ந்து ரோட்டிற்கு எதிர்புறம் உள்ள பகுதிக்கு தப்பி ஓடினார். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் தப்பி சென்ற இருவரையும் பின்னால் துரத்தி சென்று பிடிக்க முற்பட்ட போது லாரியின் ஓட்டுநர் இரும்பு கொக்கியால் உதவி ஆய்வாளரை கடுமையாக தாக்கினார். அப்போது, காவல் ஆய்வாளர் அவர்கள் தன்னை தற்காத்து கொள்ளவும், உதவி ஆய்வாளரின் உயிரை காப்பாற்றவும், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஒட்டுநரை இரண்டு முறை சுட்டுள்ளார். மற்றொரு நபர் பையுடன் தப்பி ஓட முயற்சிக்கும் போது ஆய்வாளர் அவரை சரணடைய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனை பொருட்படுத்தாமல் அவர் ஆய்வாளரை நோக்கி கற்களால் தாக்கியதால், அந்த நபரை கட்டுபடுத்த காவல் ஆய்வாளர் அந்நபரின் காலில் இரண்டுமுறை சுட்டுள்ளார். தற்காப்பிற்காக ஆய்வாளர் சுட்டதில் காயமடைந்த 1) ஜுமாந்தின் (37), த.பெ. ஹமீத், அந்துரோல கிராமம், பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம் மற்றும் 2) முகமது ஹஸ்ரு (எ) அஜர் அலி (30), த.பெ. கப்லா, ஹரியானா மாநிலம் ஆகிய இருவரும் பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜுமாந்தின் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். அவரது பிரேதம் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமுற்ற முகமது ஹஸ்ரு (எ) அஜர் அலி என்பவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி சம்பவத்தில் காயமுற்ற காவல் ஆய்வாளர் திரு.தவமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 1) இர்பான் (32), த.பெ. சகூர், தரக்கா நகர் பூரி, பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம், 2) சவுக்கீன் கான் (23), த.பெ. சுபாசனன் கான், மல்லை, பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம், 3) முகமது இக்ரம் (42), த.பெ. அப்துல் ஹமீர், பிஸ்ரு, நுகு மாவட்டம், ஹரியானா மாநிலம், 4) சபீர் (26), த.பெ. லியாகத் குடாவலி, பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம் மற்றும் 5) முபாரக் (18), த.பெ. ஹாரூன், லக்னகர், பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம் ஆகிய ஐந்து நபர்கள் கைது கைது செய்யப்பட்டு,புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இவர்கள் அனைவரும் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 27/09/2024 ம் தேதி, அதிகாலையில் நடைபெற்ற ஏடிஎம் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது முதற்கட்ட புலன் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இது போன்று வேறு ஏதேனும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து பணம் மற்றும் கண்டெய்னர் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிரிட்டா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தொடர்பான தகவல்கள் இவர்களின் சொந்த மாநிலமான ஹரியானாவில் உள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Similar News