விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு
மர்ம நபர்கள் கைவரிசை
விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதில் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் விற்பனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் விற்பனையை முடித்துவிட்டு கலெக்ஷன் பணத்தை கடையில் உள்ள லாக்கரில் வைத்துவிட்டு கடையை பூட்டி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதியினர் விற்பனையாளர் சசிகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து விரைந்து வந்த சசிகுமார் கடையில் உள்ள இரண்டு ஷட்டர்களில் இருந்த மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது 26 குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய மது பாட்டில் பெட்டி ஒன்று காணாமல் போயிருந்தது. பின்பு வெளியே வந்து பார்த்தபோது கடையில் வெளிப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் காலி பெட்டி மட்டும் கிடந்தது. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு சசிகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற டிஎஸ்பி கிரியா சக்தி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சிறப்பு உதவியாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பணம் இருந்த லாக்கர் திறக்கப்படாமல் இருந்ததால் பணம் தப்பித்தது. பின்பு கடலூரில் இருந்து தடைய வியல் டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.