மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம்

விருத்தாசலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்

Update: 2024-10-01 18:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் ரமேஷ் (வயது 35). இவருக்கு வசந்தி என்ற மனைவியும் மணிகண்டன் (17), ரகு (15) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் கட்டிட தொழிலாளியான ரமேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மாலை 3 மணிக்கு கொண்டு வந்தனர். மாலை 6:15 மணிக்கு ரமேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி இறந்தார். பணியில் இருந்த டாக்டர் சிகிச்சை அளிக்காமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் ரமேஷ் இறந்ததாகவும், டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ரமேஷ் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இந்நிலையில் ரமேஷ் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும். பணியில் இருந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைமை மருத்துவ அலுவலரை மாற்ற வேண்டும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் ரமேஷ் உறவினர்கள் ரமேஷ் பிரேதத்தை வாங்க மறுப்பு தெரிவித்து விருத்தாசலம் சேலம் சாலையில் மோகாம்பரி மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி, இன்ஸ்பெக்டர் முருகேசன், தாசில்தார் உதயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பாமகவினர் மற்றும் ரமேஷ் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News