கதர்அங்காடியில் தீபாவளி சிறப்புவிற்பனை ஆட்சியர் துவக்கினார்
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா வணிக வளாகத்தில் உள்ள கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில், கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமை வகித்து, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது- இந்திய திருநாட்டின் இதயமாக விளங்கும் கிராமப்புற ஏழை, எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.67.00 லட்சம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் (2024) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு விற்பனை இலக்காக ரூ.125.00 இலட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், கதர் விற்பனை அங்காடியில் மத்திய, மாநில அரசுகள் பருத்தி கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கதர் அங்காடிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப்பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதர் ரகங்கள் வாங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை, எளிய நூற்போர்கள் மற்றும் நெய்வோர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பொதுமக்கள் கதர் ரகங்களை வாங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவற்றை அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் வாங்கி, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் மற்றும் நூற்பாளர்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தி நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் உதவி இயக்குநர் குமரன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.