பள்ளப்பட்டி- கனமழையில் கால்வாயில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு.

பள்ளப்பட்டி- கனமழையில் கால்வாயில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு.

Update: 2024-10-09 02:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பள்ளப்பட்டி- கனமழையில் கால்வாயில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.இதன் காரணமாக சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டியில் பெய்த கனமழையின் காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வரும் முகமது உஸ்மான் (12 வயது) சிறுவன் மிதிவண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, பள்ளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே எதிர்பாராத விதமாக சிறுவன் கழிவு நீர் வடிகாலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மாணவனை மீட்க கழிவுநீர் கால்வாயில் எட்டிப் பார்த்த போது மழை நீர் வேகம் எடுத்து சென்றதால் சிறுவனை மீட்க இயலவில்லை. இதனால், அருகில் இருந்த தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் அருகில் உள்ள நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் சிறுவனை அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News