குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 136-வது பிறந்த நாள் மற்றும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 136-வது பிறந்த நாள் மற்றும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, அன்னாரது திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 அன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலன் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இன்றைய தினம் நாமக்கல் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை மாணவ செல்வங்கள் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை போன்று உடை அணிந்து புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்து மடல் – 2024 ஐ அனுப்பி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை மற்றும் புதிய ஏ.டி.எம் மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.