பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்க கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்.

பெண்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பேச்சு.

Update: 2024-11-07 10:43 GMT
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், பேருந்துகளில் மகளிருக்கு இலவச விடியல் பயண திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம், பணிபுரியும் மகளிருக்கான தோழி தங்கும் விடுதி, உயர்கல்வி பயில்வதை உறுதி செய்திடும் வகையில் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் பெற்று பயனடையும் வகையில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்நலவாரியத்தின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுய தொழில் மானியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் 100 சதவிகிதம் நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் திட்டங்களை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டு, தங்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட முன்வர வேண்டும். பெண்கள் சுய வேலைவாய்ப்பு பெற்றிடவும், பொருளாதார நிலையை மேம்படுத்திடவும் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், நாமக்கல் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும். இதனடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆடு, மாடு வளர்க்க ரூ.3.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கோழி மற்றும் தேனீ வளர்க்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்டதிற்கு வருகை தந்த போது திருச்செங்கோடு வட்டம், மோளிப்பள்ளியில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் உலர் சாம்பல் செங்கல் வைத்தார். இக்குழுவினரிடமிருந்து கலைஞர் கனவு இல்லம் வீடுகள் கட்டும் பணிகளுக்கு செங்கல் பெறப்பட உள்ளது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு பெண்கள் தங்கள் திறமையை மேம்படுத்தி தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். நீங்கள் அனைவரும் மனம் தளராது அரசின் திட்டங்களை பயன்படுத்தி சிறப்பான பாதையை நோக்கி சென்று வெற்றி பெற வேண்டும். பெண்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை அனைத்தையும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைவரும் பெற்று பயன்பெறும் வகையில் அரசு துறையினர் பணியாற்றி வருகின்றார்கள். பெண்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு, பிறருக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, சமூக நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். மேலும், மகளிருக்கான திட்டங்கள், உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் விபரம், உணவு பட்டியலின்படி இன்றைய தினம் வழங்கப்பட வேண்டிய உணவு, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவுப்பொருட்களின் இருப்பு விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டறிந்தார். மேலும், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், உஞ்சனை ஊராட்சி, சக்தி நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, சமூக நல அலுவலர் தி.காயத்திரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் வீ.சகுந்தலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) என்.எஸ்.ராஜேஸ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News