பிரசித்தி பெற்ற ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமித்து நேர்த்திகடன்..

பிரசித்தி பெற்ற ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமித்து நேர்த்திகடன்..

Update: 2024-11-07 13:19 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி (ஐப்பசி மாதம் 5ம் தேதி) பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஊரின் முக்கிய பிரமுகர்கள் கையில் பூக்களுடன் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று, பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பூக்கூடைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து நித்திய சுமங்கலி மாரியம்மன் மேல் பூக்களை கொட்டி பூச்சாட்டினர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் 1,008 கிலோ பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு அமைப்பினர் மூலம் சிறப்பு அலங்காரம் ஊர்வலம் நடத்தது. அக்டோபர் 24 ஆம் தேதி கோவில் முன்பு கம்பம் நடும்விழா நடந்தது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 4ஆம் தேதி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும், நவம்பர் மாதம் 5ஆம் தேதி கொடியேற்று விழாவும் வெகு விமர்சியாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை தீ மிதி விழா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தும், வேப்பிலையை கையில் ஏந்தியும் பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் சில பக்தர்கள் கைக்குழந்தையுடனும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தீ மிதித்தனர். முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கட்டளைதாரர்கள் தீமிதி பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் போன்றவை வழங்கினர். மேலும் கோவில் திருவிழாவை முன்னிட்டு ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், மற்றும் காவல் ஆய்வாளர் பொறுப்பு சுகவனம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ஆம் தேதி சப்தாபரணத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெப்படை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது குழந்தைகளான மெகந்த்பாலா, 5வயது, நிசாந்பாலா, 8 ஆகியோரை தூக்கிக்கொண்டு தீமிதித்தார். அப்போது எதிர்பாராத வகையில் தீயில் விழந்ததில் மூவருக்கும் தீகாயம் ஏற்பட்டது. அதேபோல், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும் தீகாயம் ஏற்பட்டது. உடனடியாக, ராசிபுரம் தீயணைப்பு துறையினால் அனைவரும் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

Similar News