மது அருந்திய தகராறில் வாலிபர் கொலை : தூத்துக்குடியில் நண்பர் கைது!
தூத்துக்குடியில் மது அருந்திய தகராறில் நண்பரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள அழகுமுத்து நகரைச் சேர்ந்தவர் செந்தில் வேல்குமார். இவரது மகன் மகாராஜா (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும், இவர் மீது ஒரு கொலை வழக்கு ஒன்றும் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பின் பகுதியில் உள்ள குடிசை வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் இரவு தனது வீட்டில் மகாராஜாவும் அவரது நண்பரான ராம்தாஸ் நகரை சேர்ந்த வன்னிமுத்து மகன் மாரிமுத்து (30) என்பவருடன் மது அருந்தி உள்ளார். பின்னர், நேற்று காலை மகாராஜாவின் மனைவி வள்ளிநாயகி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகாராஜனையும் அவரது நண்பர் மாரிமுத்துவையும் காணவில்லை. வீட்டில் ஆங்காங்கே இரத்தக் கரைகள் இருந்துள்ளன. உடனடியாக தனது கணவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து மனைவி பணிமய சூரியாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து மாயமான மகாராஜா மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகிய இருவரையும் தேடி வந்தார். இதற்கிடையே தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜாகிர் உசேன் நகரில் உள்ள ஒரு பாலடைந்த கட்டிடத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ஒரு ஆண் பிணம் கிடைப்பதாக தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மாரிமுத்து என்று தெரிய வந்தது. அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையே தாளமுத்து நகர் தனிப்படை போலீசார் மகாராஜாவை தேடினார்கள் அவரை தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே வைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மாரிமுத்துவை குடிபோதையில் கொலை செய்து, பின்னர், அவர் பிணத்தை மோட்டார் பைக்கில் வைத்து பால் அடைந்த கட்டிடத்தில் தூக்கி வீசி சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் மகாராஜாவை தூத்துக்குடி கொண்டு வந்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைநடத்தி வருகிறார்கள். இந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.