நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்,மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு.
நாமக்கல் மாநகராட்சி, சேந்தமங்கலம் மற்றும் இராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி வார சந்தை வளாகத்தில் பல அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, தினசரி சந்தையில் காய்கறிகளின் வரத்து, விலை விபரம், காய்கறிகளின் தரம், சந்தையில் செயல்பட்டு வரும் மொத்த கடைகளின் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். சேந்தமங்கலம் வட்டம், அலங்காநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இயங்கி வரும் மாவட்ட மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, மருந்து கிடக்கில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான மருந்துகளை முறையாக பிரித்து வைக்க அறிவுறுத்தி, மருந்துகளின் இருப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரி பார்க்கவும், மருத்துவமனைகளில் கேட்கப்படும் மருந்துகளை உடனடியாக வழங்க ஏதுவாக அனைத்து வகையான மருந்துகளையும் இருப்பு வைத்துக் கொள்ளவும் கிடங்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சேந்தமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இராசிபுரம் நகராட்சி, அணைப்பாளையத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, இராசிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் மற்றும் இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வுகளில் மாநகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.