நாமக்கல்: பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மு‌. ஆசியா மரியம்.

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.51.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-11-28 13:49 GMT
நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் , மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ரூ.51.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.கொமாரபாளையம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் புதியதாக பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பேருந்து நிலையம் அமையவுள்ள மொத்த பரப்பளவு, பேருந்து நிறுத்தங்கள், கடைகள் எண்ணிக்கை, இடம்பெற உள்ள பிற வசதிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, சந்தைப்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நோயாளிகளின் வருகை விபரம், அளிக்கப்படும் சிகிச்சைகள், மழை கால நோய்த்தொற்றுக்களுக்கான மருந்து, மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைத்து கொள்ள மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அமுதம் நியாய விலைக்கடையில் பொது விநியோகப் பொருட்களின் இருப்பு, விற்பனை விபரம், நியாய விலைக்கடை மூலம் பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிபாளையம் நகராட்சி, லட்சுமி புரம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகை தரும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்தும், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம், போஷான் செயலியில் குழந்தைகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, நாட்டாகவுண்டன் புதூரில், ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஜீவா செட் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, எஸ்.பி.பி பேப்பர் மில் பகுதியில் இரயில்வே சுரங்க பாதையில் நீருந்து நிலையம் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.17.77 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு மேற்கொண்டார். திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி ஊராட்சி, அய்யகவுண்டம்பாளையத்தில் ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளதையும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் தேவனாங்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தேவனாங்குறிச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ரூ.89.50 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் என மொத்தம் ரூ.51.15 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருவதை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் நகர்மன்ற தலைவர்கள் விஜய் கண்ணன் (கொமாரபாளையம்), எம்.செல்வராஜ் (பள்ளிபாளையம்), மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.ராஜ்மோகன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் (பொ) மரு.மாரியப்பன், மாவட்ட சுகாதார நல அலுவலர் மரு.க.பூங்கொடி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News