நகரமன்ற கூட்டம் கவுன்சிலர்கள் காரசார வாக்குவாதம்
குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் சுகாதாரத்துறை என கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு சுமத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,நகராட்சி ஆணையர் கணேசன் (பொ) தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: கதிரவன் (தி.மு.க.): வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வருவது இல்லை. பலமுறை சொல்லியும் பலனில்லை. ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள். இது குறித்து ஆலோசித்து ஆட்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். தர்மராஜன் (தி.மு.க.): எனது வார்டில் சுகாதார பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? ஒவ்வொரு கூட்டத்தில் கேட்டுக்கொண்டு தான் உள்ளேன். ஆனால் யாரும் வருவது கிடையாது. போன் போட்டாலும் எடுப்பது கிடையாது. மேலும் அம்மன் நகர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பல கூட்டங்களில் கேட்டும் பலனில்லை. சுமதி (சுயேட்சை): வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வர சொல்லி எந்த பலனும் இல்லை. பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. கோம்பு பள்ளத்தில் குப்பைகள் குவிந்து உள்ளது. அதனை அகற்ற வேண்டும். பாட்டரி வண்டி என்ன ஆனது? பாட்டரி திருட்டு என்றும் கூறப்படுகிறது. பாலசுப்ரமணி (அ.தி.மு.க.): குமாரபாளையம் நகராட்சி சிறந்த நகராட்சியாக விருது பெற்ற நகராட்சி. ஒவ்வொரு கூட்டத்தில் குப்பை அகற்றுவது பற்றி சொன்னால், அப்போதைக்கு சரி என்கிறார்கள். மீண்டும் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். சுகாதார அலுவலர் சிறப்பாக பணியாற்றியவர்தான். இப்போது என்ன ஆனது என தெரியவில்லை. சிறந்த நகராட்சி எனும் பெயர் இல்லாமல் போகும் அளவிற்கு, குப்பைகளை அகற்றாமல், வடிகால்களை தூய்மை படுத்தாமல் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் தான் நகராட்சி சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. அய்யன்தோட்டம் பகுதியில் குடிநீர் சரியாக வருவது இல்லை என்று சொன்னார்கள். வெங்கடேசன் (நகராட்சி துணை தலைவர், தி.மு.க.): இவ்வளவு பேர் சொல்லியும் இன்னும் தங்கள் பணியை நிறைவாக செய்யவில்லை என்றால் என்ன செய்வது? குப்பைகள் எடுத்து குடோனில் கொட்டி வைத்தால் போதுமா? அவைகள் உரமாக தயாரித்தால்தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். இதுதான் குப்பைகள் தேங்க காரணம். சுகாதாரத்துறை அவ்வளவு மெத்தனமாக உள்ளது. தலைவர் இந்த ஒரு வார காலமாக தினமும் காலையில் வார்டு வாரியாக போய் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அதற்கு என் நன்றி. நானும் கூட செல்கிறேன். அதிகாலை போன் போட்டு சொல்லி விடுவார். ஜேம்ஸ் (தி.மு.க.): குப்பை எடுக்க வண்டி வருவது இல்லை. 32 பேட்டரி வண்டிகள் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதில் உள்ள பேட்டரி கூட மாயமானது. இதர உபகரணங்களும் காணவில்லை. இது குறித்து சுகாதாரத்துறையினர் யாரிடம் தெரிவித்தார்கள்? குப்பைகள் அகற்றப்படாததால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நான் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வார்டுக்குள் போக முடியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு தமிழகம் முழுதும் நல்ல பெயர் உள்ளது. ஆனால் அந்த நல்ல பெயரை கெடுக்கும் விதமாக நமது நகராட்சி சுகாதாரத்துறை உள்ளது. புருஷோத்தமன் (அ.தி.மு.க.): குமாரபாளையம் அருகில் உள்ள கிராமங்களை இணைக்கும் ஆர்டர் வந்து விட்டதா? குப்பைகளை உரமாக்கி கொடுத்தால் எவ்வளவு இருந்தாலும் நான் வாங்கி கொள்கிறேன் என்று கூறி இருந்தேன். அனால், பல மாதங்களாக எஸ்.ஓ. வசமிருந்து எவ்வித போன் காலும் வரவில்லை. அம்பிகா (தி.மு.க.): எனது வார்டில் குப்பைகள் எடுப்பது இல்லை. ஆட்கள் சும்மா வந்து போகிறார்கள். குப்பைகள் தேங்க விடாமல் உடனே எடுக்க நடவடிக்கை வேண்டும். பழனிச்சாமி (அ.தி.மு.க.) தலைவர் கூட இருக்கும் கவுன்சிலர்கள் அவர்கள் வார்டுகளுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்கிறார்கள். கொமாரபாளையம் நகராட்சி என்ற எழுத்துப்பிழை சரி செய்ய வேண்டும் என பல கூட்டங்களில் சொல்லி வருகிறேன். வேல்முருகன் (சுயேச்சை): இதுவரை வேலை செய்யாமல் இருந்த ஆதே ஆட்கள் தான் இப்போது சரியாக வேலை செய்கிறார்கள். இப்போது மட்டும் எப்படி முடிந்தது. விஜய்கண்ணன் ( நகராட்சி தலைவர் ): ஆட்கள் பற்றாகுறை என்றார்கள். அதை சரி செய்யப்பட்டது. குப்பை கொட்ட இடம் இல்லை என்றார்கள். அதனால்தான் குப்பை எடுக்க முடியவில்லை என்றார்கள். அடுத்து குப்பை வண்டிக்கு டிரைவர் இல்லை என்றார்கள். ஆட்கள் நியமனம் செய்து அதனையும் சரி செய்யப்பட்டது. அடுத்து பொக்லின் ஓட்ட ஆள் இல்லை. அதனால் தான் பணிகள் செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். எல்லாம் சரி செய்து கொடுத்தாலும் மெடிக்கல் லீவில் போய் விடுகிறார்கள். ஆக மொத்தம், சுகாதாரத்துறையினர் வேலை செய்வது இல்லை என்று முடிவு செய்து நகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி செயல்பட்டு வருகிறார்கள். எஸ்.எஸ்.எம். குடும்பத்தினர் நம் நகராட்சிக்கு எண்ணற்ற பணிகள் செய்து கொடுத்துள்ளனர். அதனை யாரும் மறக்க மாட்டார்கள். அது போல் குப்பை கொட்டும் இடத்திற்கு வழித்தடம் இல்லாமல் உள்ளது. அதற்கு வழித்தடம் அமைக்க உதவி செய்தால், தங்கள் புகழ் மேலும் கூடும். காலத்திற்கும் அனைவரும் நினைத்து வாழ்த்தி கொண்டு இருப்பார்கள். குப்பை பிரச்சனைக்கு சுகாதார அலுவலர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை ஆட்டோ மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்ட இடம் நிர்ணயம் செய்தால் அங்கு எதிர்ப்பு வருகிறது. பிளாஸ்டிக் குடோன் நிறைந்து உள்ளது. இதனை சங்ககிரி சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதை செய்யாமல் உள்ளனர். இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.