நாம் தமிழர் கட்சியில் இருந்து நாமக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! கட்சியில் சலசலப்பு
மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில் விவசாய அணி, இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகினார்கள். இது குறித்து நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் நாமக்கல்லில் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது.... நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவார், மதச்சார்பற்ற அரசு அமைய அவர் நடவடிக்கை எடுப்பார் என நினைத்து சுமார் 12 ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றினேன்.கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக சீமானின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது. அவர் கட்சி நிர்வாகிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். நான் மட்டும் கட்சியில் இருந்தால் போதும், ஓட்டு விழும் என நிர்வாகிகளை மரியாதை இல்லாமல் பேசுகிறார். மதச்சார்பின்மை பேசிவிட்டு, தற்போது மதச்சார்பு உள்ள ஒரு கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார். இதைக்கண்டித்து ஏற்கனவே பல மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார்கள். இந்த நிலையில் கடந்த கடந்த 2021ம் ஆண்டு திடீரென்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் பதவியையும் பறித்துவிட்டார்.பல முறை அவரை சந்தித்து நேரில் பேச முயற்சித்தேன். அவரை சந்திக்க அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் கட்சியில் இருந்து, நான் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணியினர் உள்ளிட்ட சுமார் 50 பேர் இன்று விலகுகிறோம். மேலும் பலர் கட்சியில் இருந்து விலக தாயராக உள்ளனர். வேறு கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என அவர் கூறினார்.மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில் விவசாய அணி, இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பேட்டியின் போது விவசாய அணி செயலாளர் அங்கமுத்து, மகளிர் பாசறை செயலாளர் வள்ளி, மோகனூர் நகர செயலாளர் செந்தில்குமார், நாமக்கல் தொகுதி செய்தி தொடர்பாளர் அருண்குமார், நாமக்கல் இளைஞர் பாசறை செயலாளர் பொன்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.