சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மு.ஆசியா மரியம், தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், தலைமையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-11-28 15:49 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஜனவரி 2024 முதல் நவம்பர் 2024 வரை நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து 1,222 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 602 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 245 மனுக்கள் அரசு பரிசீலினையில் உள்ளது.பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும். துறை அலுவலர்கள் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி பணிகளை முடித்திட வேண்டும். தொடர்ந்து கள ஆய்வு செய்து ஏதேனும் தொய்வு இருப்பின் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். விடுதிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார். மேலும், வேளாண்மை - உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை, நெடுஞ்சாலைகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / கேட்டறிந்தார். தொடர்ந்து, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், இ-நாம் செயலி, இ-வாடகை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பணிகள், பட்டா கோரி நிலுவையில் உள்ள மனுக்கள், பள்ளி உட்கட்டமைப்பு பணிகள், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம், மக்களுடன் முதல்வர், நான் முதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பள்ளி செல்லா குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களைத்தேடி மருத்துவம், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் க.பா.அருளரசு ஆகியோர் உட்பட வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News