தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் வாரம்
சிவகங்கை மாவட்டம்,தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம், வருகின்ற 18.12.2024 ஆம் தேதி அன்று தொடங்கி, 27.12.2024 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவு கூரும் வகையில், 2024-2025ஆம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 18.12.2024 முதல் 27.12.2024 வரை ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. இதில், அரசுப் பணியாளர்களுக்கு கணினித்தமிழ், ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு, அரசாணைகள், சுற்றோட்டக் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், குறிப்பாணைகள், அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல் ஆகிய தலைப்புகளில் பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைள் 5:3:2 என்ற விகிதத்தின் அடிப்படையில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள்) அமைத்திட வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகள் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டமும், ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், கல்லுாரி மாணாக்கர்கள் பங்கேற்கும் பட்டிமன்றமும், ஆட்சிமொழிச் சட்டத்தை அறியும் வகையில் விளம்பரப் பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித்திட்ட விளக்கக் கூட்டமும் நடத்தப்பெறவுள்ளது. அதுமட்டுமன்றி, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் பள்ளி, கல்லூரி மாணக்கர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமியக் கலை நிகழ்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணியும் வருகின்ற 24.12.2024 அன்று நடத்தப்பெறவுள்ளது. எனவே, வருகின்ற 18.12.2024 முதல் 27.12.2024 வரை நடத்தப்பெறவுள்ள ஆட்சி மொழிச் சட்டவாரம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணாக்கர்கள், பொதுமக்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.