சாலையில் சிறுத்தை
திம்பம் மலைப்பாதையில் உள்ள 11 -வது கொண்டை ஊசி வளைவில் சாலையை கடந்து ஓடிய சிறுத்தை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியிலிருந்து திம்பம் வழியாக கர்நாடகாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சிறுத்தைகள் நடமாட்டம் இந்த பகுதியில் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திம்பம் மலைப்பகுதியில் உள்ள 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலையை திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கடந்து ஓடியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை சாலையை கடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சில வாகன போட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தைகள் படம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. தற்போது 11 -வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.