சாலையை அகலப்படுத்தும் பணி
பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா : மாற்றுச்சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வருகின்றனர். ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பண்ணாரி அம்மனை தரிசித்து செல்கின்றனர். பண்ணாரி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் குண்டம் திருவிழா உலகப் புகழ் பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து தீக்குளி இறங்குவார்கள். இதைப்போல் கால்நடைகளும் குண்டம் இறங்குவது தனி சிறப்பாகும். குண்டம் இறங்குவதற்காக ஒரு வாரத்திற்கு முன்பாகவே கோவிலில் வந்து பொதுமக்கள் இடம் பிடித்து குண்டம் இறங்குவார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவதால் கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் நெரிசல் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த கோவில் வழியாக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. மாற்று வழியாக பவானிசாகர், புதுகுய்யனூர், ராஜநகர் சாலை வழித்தடத்தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சாலை குறுகலாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர். மேலும் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இதை அடுத்து புது குய்யனூர் முதல் ராஜன்நகர் வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.