பயிர்கள் சேதம்

காளிங்கராயன் பாசன பகுதியில் மயில்கள் பெருக்கத்தால் பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

Update: 2024-12-18 05:26 GMT
ஈரோடு காலிங்கராயன் பாசன பகுதிகளான, பெருமாள் மலை, ஆர்.என்.புதூர், கண்ணாம்பு ஓடை, வைரபாளையம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில், சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாசன பகுதிகளில் அண்மைக்காலமாக மயில்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களை கூட்டம், கூட்டமாக வரும் மயில்கள் கொத்தி தின்கிறது. இந்த மயில்களை துரத்தினாலும் ஆள் இல்லாத போது மீண்டும் காட்டுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நாட்டின் தேசிய பறவையாக மயில்கள் உள்ளதால் இவற்றை தாக்கவோ, கொல்லவோ கூடாது என வனத்துறை எச்சரிப்பதால் மயில்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது :- சில ஆண்டுகளுக்கு முன்பு பயிர்களுக்காக விவசாயிகள் வைத்த குருணை மருந்தை சாப்பிட்டு மயில்கள் இறந்து போனது. அப்போது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து மயில்களை விஷம் வைத்து கொன்றதாகக் கூறி விவசாயிகளை கைது செய்தனர். அதேசமயம் மயில்களால் பயிர்கள் அழிக்கப்படும் போது அதற்கு எந்தவித நிவாரணத்தையும் வனத்துறை வழங்குவதில்லை. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க முடியவில்லை. அவ்வப்போது தோட்டத்தில் காவல் காத்து மயில்களை விரட்டி அடிக்கிறோம். ஆனாலும் ஆள் இல்லாத சமயத்தில் தோட்டத்தில் புகுந்து பயிர்களை மயில்கள் நாசம் செய்கின்றன. எனவே, அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாராக உள்ள நிலையில், மயில்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News