மோசடியில் ஈடுபட்டவர் கைது
விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது
வங்கியில் விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்தவர்களிடம் 217 பவுன் நகை மற்றும் ரூ.89 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் வேல மரத்தூரை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (35). கூலி தொழிலாளி. இவர், அந்தியூர், பவானி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களிடம் வங்கியில்(நபார்டு வங்கி) விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாகவும், அதற்கு குறைந்த வட்டி என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்தியூர் புது மேட்டூர் பகுதியை சேர்நத் ரமேஷ்குமார் மனைவி சசிகலா (35). கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி விவசாய கடன் பெறுவதற்காக 12 பவுன் நகையை கருணாமூர்த்தியிடம் வழங்கியுள்ளார். இதையடுத்து கருணாமூா்த்தியே விவசாய கடன் கிடைத்து விட்டதாக கூறி குறிப்பிட்ட தொகையை சசிகலாவிடம் வழங்கியுள்ளார். மேலும், கருணாமூர்த்தி அவருக்கு அவசர தேவைக்கு பணம் தேவை எனவும், அதற்கு வங்கி வட்டியை விட கூடுதலாக தருவதாக சசிகலாவுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி சசிகலா ரூ.9 லட்சம் ரொக்கத்தை கருணாமூர்த்தியிடம் அளித்துள்ளார். ஆனால், கருணாமூர்த்தி கூறியபடி விவசாய கடனுக்கான மானியமும், வாங்கிய தொகைக்கான வட்டியும், அசலும் தரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகலா கடந்த ஜூன் மாதம் அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கருணாமூர்த்தி வங்கியில் விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாக கூறி, நகைகளை பெற்று தனியார் வங்கியிலும், பைனான்ஸ் நிறுவனத்திலும் அடமானம் வைத்து, அதற்கான தொகையை மட்டும் வழங்கி, பின்னர் அதே தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாக பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதேபோல் 30க்கும் மேற்பட்டவர்களிடம் 217 பவுன் நகை மற்றும் ரூ.89 லட்சம் ரொக்கம் பெற்று மோசடி செய்து தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவின்பேரில், அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன்பேரில், மோசடியில் ஈடுபட்ட கருணாமூர்த்தியை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் தேடி வந்தார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் கருணாமூர்த்தி சரண் அடைந்தார். தொடர்ந்து, அவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். கருணாமூர்த்தியிடம் இருந்து பல்வேறு இடங்களில் அடமானம் வைத்ததற்கான ரசீதுகள் போலீசார் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ரசீது மூலமாக நகைகளை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.