அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த ஸ்டாலினின் மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம். பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். அண்ணாமலை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். ராமதாஸ்: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி? தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறி விடாதா? திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலை திசை திருப்புவதற்குத் தான் திமுக அரசு முயல்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை - கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், திமுகவுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர் தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்பார்கள். கே.பாலகிருஷ்ணன்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வன்குற்றச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னையின் மையப்பகுதியில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படி நடந்திருப்பது அங்கு பயிலும் மாணவிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது, குறிப்பாகக் கல்விக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது கவலையளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்கிட வேண்டுமெனவும், சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகளை ஒழித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், விடுதிகள் அனைத்திலும் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிட வேண்டுமெனவும், பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழக அரசை வலியுறுத்துகிறது.