குத்தகை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், தேசிய வேளாண் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
விவசாயிகள்
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, "மூன்று வேளாண் சட்டங்களின் நகலாகக் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தும் வரைவு அறிக்கையை (வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்டவை) திரும்பப் பெற வேண்டும். இந்திய உணவு கழகத்தின் முகவராக உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தை மாற்றி வேறு முகவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில், அடிப்படை கட்டமைப்பு கொண்ட நுகர்பொருள் வாணிபக் கழகமே தொடர வேண்டும். ஆலோசனை வந்தால் மாவட்ட நிர்வாகம் நிராகரிக்க வேண்டும். திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, கடன் வசூல் தீர்ப்பாயம் மூலம் 10.01.2025 க்குள் ஆஜராகி கடன் தீர்ப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. உடன் இது குறித்து சிறப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரத்தநாடு, அம்மாபேட்டை பகுதிகளில் அறுவடை பணிகளில் நடைபெற்று வருவதில், மழை, வெள்ளம் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு மாதிரி அறுவடையை உடன் செய்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலிவலம் கூட்டுறவு வங்கி விவசாய நகைக் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். திருவிடைமருதூர் வட்டம், சேங்கனூர் வருவாய் கிராமம் பனந்தோப்பு கண்ணி வடிகால் வாய்க்காலை எப்.எம்.பி கணக்கில் சேர்த்திட வேண்டும். பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி ஊராட்சி வேலுப்பட்டி கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் சென்று உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள், மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும். ஒரத்தநாடு தாலுகா ஈச்சங்கோட்டை கால்நடை பராமரிப்பு, உயரின கால்நடை பெருக்குப்பண்ணையில், பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி, பண்ணை மாடு முட்டி உயிரிழந்த நிலையில் இதுவரை நிவாரணம் தரப்படவில்லை. ஒப்புக் கொண்டபடி அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஒரத்தநாடு தாலுகா பஞ்சநதிக்கோட்டை, காசாவளநாடு, கோவிலூர், ஆழிவாய்க்கால், நெல்லுப்பட்டு, சேதுராயன்குடிக்காடு, ஈச்சங்கோட்டை பகுதிகளில் அருள்மிகு கெம்புகேசவர் திருக்கோவில் நிலத்திற்கு சொந்தமான இடத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருபவர்களை, குத்தகை கட்டவில்லை என்று வெளியேற்றும் முயற்சி நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பூதலூர் தாலுகா ராயமுண்டான்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைத்து தர வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.