ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாலை ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2024-2025ஆம் ஆண்டிற்கு 922.00 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில், டிசம்பர் - 2024 திங்கள் வரை 512.42 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024-25) உரத்தேவை 41,030 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 12,153 மெட்ரிக்டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா, பொட்டாஷ் மொபலி சிங்பாக்டீரியா, அசோஸ்பாஸ், ஜிங்க்சொலிபிலைசிங்பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2024-2025ஆம் ஆண்டிற்கு 55,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 4,100 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 35,074 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். திருந்திய பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 6166 விவசாயிகள் 4875.43 ஏக்கர் பரப்பு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 750.00 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 530.25 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 30.11.2024 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 38,432 விவசாயிகளுக்கு ரூ.383.52 கோடி பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை தருமபுரி மாவட்ட கூட்டுறவுசர்க்கரை ஆலையில் 6,504 குவிண்டாலும், கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 24,722 குவிண்டாலும் சர்க்கரை இருப்பு உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.மலர்விழி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) குணசேகரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பி.அறிவழகன், அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்..