விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்: கோயம்பேட்டில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதோடு பரபரப்பான சூழல் நிலவியது.

Update: 2024-12-28 16:45 GMT
கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதற்கான குருபூஜையில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் வரையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக தலைமை நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்தவும் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த் நினைவுநாள் பேரணிக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. வேண்டுமென்றே பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதாக தேமுதிகவினர் குற்றஞ்சாட்டினர். இருப்பினும் விஜயகாந்த் நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் தலைமையில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News